×

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சின்னம் பிரச்னை என்பது தொடர்ந்து பல கட்சிகளுக்கு நீடித்து வருகிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு மைக் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது மதிமுகவுக்கு சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வேண்டும் எனக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வேட்புமனு தாக்கலுக்கு ஒரே நாளே உள்ள நிலையில், தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடும் படியும் வைகோ கோரிக்கை விடுத்திருந்தார். 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி மதிமுக மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது இன்று காலை ஒன்பது மணிக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று (மார்ச் 27) மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடும் கட்சிக்கு சின்னங்கள் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று மதியம் இந்த முடிவு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

குறைந்தது 2 தொகுதியில் போட்டியிடாததால் பம்பர சின்னத்தை மதிமுகவுக்கு ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்கிறோம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக தொடந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்று வந்தது. திமுக கூட்டணயில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால் புதிய ஒரு சின்னம் மதிமுகவுக்கு வழங்கப்படும்.

 

The post மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Madimuga ,Chennai High Court ,Chennai ,ICourt ,Secretary General ,Wiko ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல் பரப்புரை தொடர்பாக...